செய்திகள்

கவர்னர் கிரண்பேடியுடன் மோதல் போக்கு கிடையாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

Published On 2016-06-15 04:06 GMT   |   Update On 2016-06-15 04:06 GMT
புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரியம்மன் அதிஷ்டானத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரியம்மன் அதிஷ்டானத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநில மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே மிகப்பெரிய பிளவு இருந்து வந்ததால் வளர்ச்சி ஏதும் நடக்கவில்லை. அதை சரி செய்து மத்திய அரசுடன் சுமூக போக்கை கடைபிடித்து புதுச்சேரி வளர்ச்சிக்காக பாடுபட உள்ளேன்.

எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக இருக்க கூடாது. எதிர்கட்சிகள் என்பது ஆளும் கட்சி செய்யும் நல்ல காரியங்களை பாராட்டியும் தவறுகளையும் சுட்டி காட்ட வேண்டும். அதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை.

ஆனால் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் நாங்கள் பொறுப்பேற்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க வரவில்லை. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. இதுபோன்ற விரோத போக்கு எதிர்க்கட்சிகளுக்கு இருக்க கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அவர்கள் கூறினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார்.

நான் போட்டியிடுவதற்கு ஏதுவாக எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா-பிரதமர் மோடி சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் மத்திய அரசின் உதவி கண்டிப்பாக தேவை. எனவே முதல்வர்-பிரதமர் சந்திப்பு நடந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று. வரவேற்கத்தக்கது. விரைவில் இதுபோன்று புதுச்சேரி மாநில அமைச்சர்களுடன் நானும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

பிரதமரின் வெளிநாட்டு பயணம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், போகபோகத்தான் தெரியும் என்றார்.

புதுச்சேரி முதல்நிலை ஆளுனர் கிரண்பேடிக்கும் உங்களுக்கும் இடையே மோதல் உருவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்து பதில் அளித்த அவர், எனக்கும் ஆளுனர் கிரண்பேடிக்கும் இடையே எந்தவித உரசலும் இல்லை. நாங்கள் யாருடனும் உரச மாட்டோம். அவர்கள் உரசினாலும் அதை சரி செய்து ஆட்சி செய்வோம் என்றார்.

Similar News