செய்திகள்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு பிடிவாரண்டு

Published On 2016-06-15 07:37 GMT   |   Update On 2016-06-15 15:17 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது இளங்கோவன் மற்றும் விஜயதாரணி ஆகிய இருவரும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக நாகர்கோவில் மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் அரசு வக்கீல் ஞானசேகர் இருவர் மீதும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார்.

இதில் விஜயதாரணி எம்.எல்.ஏ. மீதான வழக்கு இன்று நாகர்கோவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆஜராகவில்லை.

நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருவதால் விஜயதாரணி சார்பில் வக்கீல்களும் விசாரணைக்கு வரவில்லை. எனவே விஜயதாரணி சார்பில் அவரது உதவியாளர் ராஜகோபால் கோர்ட்டில் ஆஜராகி விஜயதாரணி கோர்ட்டுக்கு வராததற்கான காரணத்தை மனுவாக தாக்கல் செய்தார்.

இதற்கு அரசு வக்கீல் ஞானசேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்தான் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அல்லது அவர் சார்பில் வாதிடும் வக்கீல்கள் வர வேண்டும். உதவியாளர் ஆஜராவதை ஏற்க முடியாது என்றார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நாகர்கோவில் செசன்சு கோர்ட்டு நீதிபதி சதிகுமார் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை ஜூலை மாதம் 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்திருப்பதை தொடர்ந்து அவர், உடனடியாக கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையேல் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நிலை ஏற்படும்.

அதற்கு முன்பு அவர், கோர்ட்டில் ஆஜராகி பிடிவாரண்டில் இருந்து விலக்கு பெற வேண்டும்.

இதுபோல ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு நாளை இதே கோர்ட்டில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையையொட்டி நாகர்கோவில் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News