செய்திகள்

கோவையில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2016-06-15 13:42 GMT   |   Update On 2016-06-15 13:42 GMT
கோவையில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கோவை:

கோவை கே.ஜி.சாவடி எட்டிமடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், திருப்பூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று எட்டிமடையில் திருமணம் நடக்க இருந்தது.

இந்த நிலையில், மணப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்றும், எனவே திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் சென்றது. அதன் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணிசோபியா, மதுக்கரை யூனியன் அலுவலர் சுசீலா, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஆகியோர் நேற்று இரவு பெண்ணின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் மணப்பெண்ணுக்கு 17 வயது நடந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என போலீசார் கூறினர். மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப் படி குற்றம், மீறி திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து திருமண ஏற்பாடுகளை மணப்பெண் குடும்பத்தினர் நிறுத்தினர். இதுதொடர்பாக இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர். பின்னர் இருவீட்டாருக்கும் அதிகாரிகள் அறிவுரைகள் கூறி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News