குளச்சல் துறைமுக பாலத்தில் கடல் அரிப்பால் மணல் மேடு மாயம்
குளச்சல்:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படும்.
தென் மேற்கு பருவமழை காலங்களில் கடல் சீற்றம் அதிகமாகும். அலைகள் பனைமர உயரத்திற்கு எழுந்து மணற்பரப்பை தாண்டி ஊருக்குள் நுழையும். இதனால் கடற்கரையில் நிறுத்தப்பட்ட கட்டுமரங்களை மணற்பரப்பில் நிறுத்த முடியாமல் மீனவர்கள் மேடான பகுதிக்கு கொண்டு செல்வார்கள்.
தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பு குளச்சல் துறைமுக பாலத்தின் ராட்சத தூண்களுக்கு கீழே மணல் ஒன்று சேர்ந்து திடீர் மணல் திட்டு உருவாகும். சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு உருவாகும் மணல்மேடு பாலத்தின் மேற்பகுதி வரை உயர்ந்திருக்கும்.
கடந்த மே மாதம் உருவான இந்த மணல் மேட்டில் குளச்சலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏறி அமர்ந்து கடலின் அழகை ரசிப்பது வழக்கம். இந்த மணல்மேடு தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தினால் திடீரென மாயமாகி விட்டது.
கடலரிப்பு மற்றும் தொடர்ந்து வீசிய ராட்சத அலைகள் துறைமுக பாலத்தின் ராட்சத தூண்களில் மோதி சிதறும் போது இந்த மணல் மேடும் கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது.
இன்று அந்த மணல் மேடு முற்றிலும் கரைந்து மாயமாகி இருந்தது. இது 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் துறைமுக பாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது.