செய்திகள்

செவாலியே விருது கமல்ஹாசனின் சாதனைக்கு மேலும் ஒரு மகுடம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2016-08-22 02:44 GMT   |   Update On 2016-08-22 02:44 GMT
“செவாலியே விருது கமல்ஹாசனின் சாதனைக்கு மேலும் ஒரு மகுடம்” என்று கூறி அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

“செவாலியே விருது கமல்ஹாசனின் சாதனைக்கு மேலும் ஒரு மகுடம்” என்று கூறி அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ‘முகநூல்’ (பேஸ்புக்) பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய ‘செவாலியே’ விருதைப் பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரையுலகில் கடின உழைப்பு, கலைத்திறமை ஆகியவற்றால் சர்வதேச அளவிலான செவாலியே விருது பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திற்குமே நமது கமல்ஹாசன் பெருமை சேர்த்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு செவாலியே விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது எனக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, திரைத்துறையில் கடந்த 50 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறந்து வரும் அவர் இதுவரை பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் பல்வேறு தேசிய, மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். பிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அவரது சாதனைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல் கிடைத்திருக்கும் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது திரையுலக வாழ்வில் அவருக்கு மிக முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என சினிமாவில் பன்முகத்திறமையாளரான நடிகர் கமல்ஹாசன் மேலும் பல விருதுகளை வாங்கிக் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News