செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: தமிழக - கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றம்

Published On 2016-09-28 01:22 GMT   |   Update On 2016-09-28 01:22 GMT
காவிரியில் தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஓசூர் அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஓசூர்:

காவிரியில் தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஓசூர் அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். 21-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி கன்னட அமைப்புகள், விவசாயிகள் கடந்த 5-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த 6-ந் தேதி முதல் தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. ஓசூருடன் நிறுத்தப்பட்டன. கடந்த 11-ந் தேதி ஒரு நாள் மட்டும் தமிழக அரசு பஸ்கள் கர்நாடகாவிற்கு சென்ற நிலையில், 12-ந் தேதி கர்நாடகாவில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறை சம்பவங்கள் நடந்ததால் அன்று முதல் மீண்டும் தமிழக அரசு பஸ்கள் செல்லவில்லை.

நேற்றுடன் 21-வது நாளாக தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு செல்லவில்லை. அதே போல கடந்த 12-ந் தேதி முதல் கர்நாடக அரசு பஸ்களும் ஓசூருக்கு வரவில்லை. மேலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடகாவிற்குள் வரு வதற்கும், கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்கள் ஓசூர் ஜூஜூவாடி முதல் அத்திப்பள்ளி வரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 21-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் கர்நாடக அரசு அணையில் தண்ணீர் இல்லை என்று கூறி, தண்ணீர் வழங்க முடியாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்து கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

கர்நாடக அரசின் தீர்மானங்கள் சுப்ரீம் கோர்ட்டை கட்டுப்படுத்தாது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்றது. இதனால் கர்நாடகாவில் நேற்று மீண்டும் போராட்டங்கள் தொடங்கியது. குறிப்பாக மண்டியா, ராம்நகர், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன. அதனால் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அத்திப்பள்ளியில் மாநில எல்லையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களாக துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கன்னட ஜாக்குருதி வேதிகே அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத்தேவா தலைமையில் நேற்று மாலை ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது:-

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க கூடாது. இதில் உறுதியாக இருக்க வேண்டும். இதற்காக பாராளுமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த 28 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் கன்னடர்களின் நலனுக்காக கர்நாடகாவில் உள்ள எம்.பி.க்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அவர்களின் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்துவோம்.

அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக கன்னட சலுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளோம். இதில் கன்னட அமைப்புகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News