செய்திகள்

திருவிடைமருதூர் அருகே மாட்டு தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை: 3 பேர் கைது

Published On 2016-09-28 10:18 GMT   |   Update On 2016-09-28 10:18 GMT
திருவிடைமருதூர் அருகே மாட்டு தொழுவத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த வெளிமாநில மதுபாட்டில்கள், சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவிடைமருதூர்:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மணவெளி தெருவில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் பார் உள்ளது. இந்த பாரை திருவிடைமருதூர் மணவெளி தெருவை சேர்ந்த இளங்கோவன் (44), ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறார். இந்த பாரில் அரசு குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து காலை மற்றும் இரவு நேரங்களில் மதுபாட்டில் விற்கப்படுவதாகவும், சட்ட விரோதமாக வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் தஞ்சை டாஸ்மாக் துணை கலெக்டர் ராமுவுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து பார் நடத்தி வந்த மணவெளி தெருவில் உள்ள இளங்கோவன் வீட்டுக்கு கலால் உதவி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருவிடைமருதூர் டி.எஸ்.பி.பாண்டி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் மதுவிலக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள அவரது மாட்டு தொழுவத்தில் 750 மில்லி அளவுள்ள 212 மதுபாட்டில்கள், 180 மில்லி அளவுள்ள 102 மதுபாட்டில், 4 பெரிய கேன்களில் 105 லிட்டர் சாராயத்தை பதுக்கி மூட்டைகளில் கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள், சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாருக்கு சீல்வைத்தனர்.

இதை தொடர்ந்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணவெளி தெருவை சேர்ந்த இளங்கோவனின் சகோதரர் சுரேந்தர் (34), மற்றும் பாரில் வேலை செய்த அதே தெருவை சேர்ந்த பாலையன் (55), விஸ்வநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய இளங்கோவனை தேடி வருகின்றனர்.

Similar News