செய்திகள்

மலையாள நடிகர் வின்சென்ட் மனைவி விபத்தில் பலி: உடல் உறுப்புகள் தானம்

Published On 2016-10-16 08:30 GMT   |   Update On 2016-10-16 08:30 GMT
பிரபல மலையாள நடிகர் மறைந்த வின்சென்ட் மனைவி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மறைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.
சென்னை:

பிரபல மலையாள நடிகர் வின்சென்ட். இவர் 1991-ம் ஆண்டு சென்னையில் மரணம் அடைந்தார். இவரது மனைவி மேரி (வயது 54). சென்னை முகப்பேர் ஸ்பார்ட்டன் நகரில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு ராபின், ரிச்சர்டு ஆகிய மகன்கள் உள்ளனர்.

இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் வாழப்பள்ளி. ராபின் சினிமா உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். ரிச்சர்டு துபாயில் வசித்து வருகிறார்.

மேரி அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 13-ந்தேதி மேரி திருமங்கலத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் தலையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த போதும் அவருக்கு காதில் ரத்தம் வருவது நிற்கவில்லை.

இதையடுத்து அவர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேரி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க மகன்கள் சம்மதித்தனர். அதன்படி மேரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முகப்பேரை சேர்ந்த பாலாஜி (18) என்பவரை கைது செய்தனர். அவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆவார். அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேரியின் இறுதிச்சடங்கு வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Similar News