செய்திகள்

செல்போன் வாங்கித்தராததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2016-11-20 13:08 GMT   |   Update On 2016-11-20 13:08 GMT
திருப்பூரில் செல்போன் வாங்கித்தராததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்:

திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தனர்.

மகன்கள் தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறார்கள். சுமதி டெய்லர் கடைக்கு சென்று மகன்களை காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில் சுமதியின் மூத்த மகன் சிவபாலன் (வயது 17). இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சாதாரண செல்போனை வைத்திருந்தார்.

இவருடன் படிக்கும் மாணவர்கள் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தனர். அதில் உள்ள வாட்ஸ்- அப், பேஸ் புக் உள்ளிட்டவைகளை பார்த்து மகிழ்ந்தனர். இதேபோன்று விலை உயர்ந்த செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை சிவபாலனுக்கு வந்தது.

வீட்டிற்கு வந்த சிவபாலன் தனக்கு விலை உயர்ந்த செல்போன் வேண்டும் என்று தாயிடம் கேட்டார். இப்போது புதிய போன் வாங்கும் அளவுக்கு பணம் இல்லை. பின்னர் வாங்கித்தருகிறன் என்று சுமதி கூறினார்.

இதில் மனவேதனை அடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிவபாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்ற தாய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிவபாலன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி துடித்தார்.

இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News