செய்திகள்

மீன் வளர்ப்போருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு

Published On 2017-01-15 16:35 GMT   |   Update On 2017-01-15 16:35 GMT
வறட்சியால் மீன் உற்பத்தி பாதிப்படைந்து உள்ளதால் மீன் வளர்ப்போருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மன்னார்குடி:

தமிழ்நாடு மீன் வளர்ப்பு விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் திருமைக்கோட்டை ரவிச்சந்திரன் தலைமையில் தஞ்சாவூர் சங்க நிர்வாகிகள் மன்னார்குடிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதித்து விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இதேபோல் விவசாயத்துடன் உபதொழிலாக நிலத்தில் குளம் வெட்டி மீன்வளர்ப்பு மேற்கொண்ட விவசாயிகளுக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீன்குஞ்சு உற்பத்தி மையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மீன்குஞ்சுகளும் விற்பனையின்றி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

தானிய விதைகளைப் போல் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க முடியாது. நெல், கரும்பு விவசாயம் பாதிக்கும் நிலையில் நிலத்தடி நீரை குளங்களுக்கு பாய்ச்ச இயலவில்லை.

முறையாக மீன் வளர்ப்பில் ஆண்டுக்கு 1 லட்சம் வரை 1 ஏக்கரில் வருமானம் ஈட்டமுடியும். ஆனால் இவ்வாண்டு அந்த வருமானத்தை இழந்து நிற்கிறோம். ஓரு சில இடங்களில் சிறிய அளவில் மீன் வளர்த்து எடுத்த போதிலும் வறட்சி காரணமாக கிராம பொருளாதாரம் சிதைந்து விட்டது.

இதனால் மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஓன்றுக்கு ரூ.40,000 என்ற விகிதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். நாட்டின புரத உணவுத் தேவையை உள்நாட்டு மீன் வளர்ப்பின் மூலமும் ஈடு செய்ய முடியும் என்ற காரணத்தால் மத்திய அரசின் வேளாண் அமைச்சகமும், தமிழக அரசும் பல்வேறு மானிய உதவிகள் வழங்கியும், பயிற்சிகள் அளித்தும் ஊக்குவித்து வருகின்றன.

அதன் காரணமாகவே இன்று தமிழ்நாட்டில் சுமார் 28,000 எக்டேர் அளவிற்குமேல் புதிய மீன்வளர்ப்பு குளங்கள் வெட்டப்பட்டு மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பு மத்திய அரசில் வேளாண் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News