செய்திகள்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக்கூடாது: பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Published On 2017-01-25 00:10 GMT   |   Update On 2017-01-25 00:10 GMT
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட கேரள அரசை அனுமதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட கேரள அரசை அனுமதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி ஆற்றின் கிளை நதியான பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்டுவதற்கு கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் கிடைத்தது. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக பவானி மற்றும் காவிரி ஆறுகளை நம்பியுள்ள மக்களுக்கு இது கவலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேக்குவட்டை மற்றும் மஞ்சிகண்டி ஆகிய இடங்களில் 2 தடுப்பணைகளை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கான களப்பணிகளை கேரள அரசு தொடங்கி இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாமல், படவாயல் என்ற இடத்தில் நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடந்திருப்பதாகவும், அடிக்கல் நாட்டுவதற் கான பொருட்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

காவிரி ஆற்றின் முக்கிய கிளை நதிகளில் பவானியும் ஒன்று என்பது உங்களுக்கு தெரியும். கடந்த 5.2.07 அன்று இறுதி உத்தரவை காவிரி நதிநீர் தீர்ப்பாயம் வழங்கியும்கூட, அதை எதிர்த்து கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் சிறப்பு விடுப்பு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளன.

இறுதி உத்தரவில் உள்ள சில அம்சங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த சிவில் அப்பீல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கடந்த 9.12.16 அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும், சிவில் அப்பீல் வழக்குகள் மீதான விசாரணை 7.2.17 தொடங்கும் என்றும், அன்றிலிருந்து தினமும் அந்த வழக்குகள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் கடந்த 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை முறையாக அமல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் முழுவதுமே சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்குள் இருக்கிறது.

தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் வகையில் திட்டத்தின் முழு விளக்கத்தையும் தமிழக அரசிடம் தெரிவிக்காமலும், தமிழக அரசின் முன்அனுமதியை பெறாமலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சித்தால், பவானியில் இயல்பான நீரோட்டம் தடைபடுவதோடு தமிழகத்துக்கு வரும் நீர் வரத்து குறைந்துவிடும்.

தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை மீறி, தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

எனவே, இந்த சூழ்நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு கேரள அரசுக்கு உத்தரவிடும்படி, மத்திய நீராதாரம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சீரமைப்பு அமைச்சகத்தை நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

தமிழக அரசின் முன் அனுமதியைப் பெறாமல், திட்டங்களையோ, பணிகளையோ மேற்கொள்ளக்கூடாது என்று கேரள அரசுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். அதோடு, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குகள் முடியும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்படும் வரையிலும், கேரள அரசு எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Similar News