செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியல்: 5 நாட்களுக்கு பின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் திடீர் வழக்கு

Published On 2017-01-25 14:02 GMT   |   Update On 2017-01-25 14:02 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் ரெயில் மறியல் செய்தனர்.இந்நிலையில் 5 நாட்களுக்கு பின் போலீசார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசியல் கட்சிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவிலில்  குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் கடந்த 20-ந்தேதி கோட்டார் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 180 ஆண்கள், 20 பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று கோட்டார் போலீசார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், குழித்துறை நகரச் செயலாளர் ஆசைத்தம்பி உள்பட 145 பேர் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதி பெறாமல் நடைபெற்றதாக  எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் உள்பட 145 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Similar News