செய்திகள்

தவறான மருந்தால் ஜெயலலிதா இறந்ததாக இந்தியா டுடே தகவல்: பிஎச் பாண்டியன் அதிரடி

Published On 2017-02-08 06:07 GMT   |   Update On 2017-02-08 06:07 GMT
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தவறான மருந்து அளிக்கப்பட்டதாலேயே இறந்தார் என் இந்தியாடுடே தகவல் அளித்துள்ளதாக பி.எச் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தனது பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பல்வேறு பரபரப்பு தகவல்களை அளித்த முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக தலைமை மீது அதிருப்தியை தெரிவித்துள்ள பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பல்வேறு எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்த முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன், ‘சசிகலா குடும்பத்தாருக்கு பணம் மட்டுமே பிரதான குறிக்கோள் ஆகும். இதோடு சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்களை தடுக்க கூடாது. தமிழகத்தில் நல்லாட்சி அமைவதை அவர்கள் தடுக்க கூடாது’ என்று தெரிவித்துள்ளார். 

இதோடு தவறான மருந்து கொடுக்கப்பட்டதாலேயே ஜெயலலிதா இறந்தார் என இந்தியாடுடே தகவல் அளித்துள்ளதாகவும், இது குறித்து மேலும் பல தகவல்களை இந்தியாடுடே இன்று மாலை அறிவிக்க இருப்பதாகவும் பிஎச் பாண்டியன் தெரிவித்தார்.

Similar News