செய்திகள்

சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு: காவல்துறை கண்காணிப்பு

Published On 2017-02-08 06:19 GMT   |   Update On 2017-02-08 06:19 GMT
ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை பணிய வைத்தனர்.

அந்த பரபரப்பு ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு கூறிய குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலை மீண்டும் உலுக்கும் வகையில் மாறியுள்ளது. அவரது குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை பெரும்பாலானவர்கள் ஆதரித்து தகவல்களை பரவ விட்டுள்ளனர். இதன் காரணமாக சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு விடுவார்களோ என்ற அச்சம் போலீசாரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அரசுக்கு எதிராக சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Similar News