செய்திகள்

வாகன நிறுத்தம் இல்லாத ஓட்டல்களை மூடவேண்டும்: போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-02-10 08:24 GMT   |   Update On 2017-02-10 08:24 GMT
வாகன நிறுத்தம் இல்லாத ஓட்டல்கள் அனைத்தையும், சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர போலீசார் உடனடியாக இழுத்து மூடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், லோகு என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சென்னை ஐகோர்ட்டுக்கு எதிரே உள்ள பல பெரிய ஓட்டல்களில் வாகன நிறுத்தங்கள் எதுவும் இல்லை.

இதனால், ஓட்டலுக்கு சாப்பிட வரும் நபர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இந்த வாகனங்களினால், அப்பகுதி முழுவதும் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு வந்தபோது, ஒரு ஓட்டலை தொடங்க மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் உரிமம் வழங்கும்போது, அந்த ஓட்டலுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த உரிமை இடம் உள்ளதா? என்பதை அதிகாரிகள் சரி பார்க்கவேணடும் அல்லவா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சயகி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஆனால், இதுவரை அந்த ஓட்டல்கள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. எனவே, இதன்பின்னரும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது. வாகன நிறுத்தம் இல்லாத ஓட்டல்கள் அனைத்தையும், சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர போலீசார் உடனடியாக இழுத்து மூடவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Similar News