செய்திகள்

நந்தம்பாக்கத்தில், மின் கற்றல் மையம் அமைக்க வேண்டும்: தா.மோ.அன்பரசன் வலியுறுத்தல்

Published On 2017-03-22 10:46 GMT   |   Update On 2017-03-22 10:46 GMT
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெற நந்தம்பாக்கத்தில், மின் கற்றல் மையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

நந்தம்பாக்கத்தில் படித்த மற்றும் படிக்கும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பயிற்சி பெற மின் கற்றல் மையம் (இ லேர்னிங் சென்டர்) அமைக்கப்படுமா? என்று தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பதில் அளிக்கையில், “அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இணைய வழி (கம்ப்யூட்டர்) மூலம் கற்கும் பயிற்சிக்காக ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மடிக்கணினி மூலமும் பாடங்களை படிக்க முடியும். எனவே மின்கற்றல் மையம் தனியாக அமைக்க தேவையில்லை.

தா.மோ.அன்பரசன்:- ஆலந்தூர் தொகுதியில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஏராளமானோர் வேலையின்றி சிரமப்படுகின்றனர்.

அந்த இளைஞர்களின் திறனை மேலும் வளர்ப்பதற்கும், அவர்கள் போட்டி தேர்வுகளை எளிதில் எதிர் கொண்டு வேலை வாய்ப்புகள் பெறுவதற்காகவும், மின்வழி கற்கும் முறையை பயன்படுத்தி நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அருகில் மின் கற்றல் மையம் அமைக்க வேண்டும்.

இதுபோன்ற மின் வழி கற்றல் மையங்கள் தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் எங்கெங்கு அமைத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் நிலோபர் கபில்:- மின்கற்றல் மையம் தனியாக அமைக்க தற்போது தேவை எதுவும் இல்லை.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Similar News