செய்திகள்

தர்மபுரி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2017-04-01 16:35 GMT   |   Update On 2017-04-01 16:35 GMT
தர்மபுரி அருகே இன்று காலை டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த சந்திரநல்லூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முதல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூடப்படுவதால் அந்த கடையை சந்திரநல்லூர் கிராமத்தில் இடமாற்றும் செய்யப்படுவதாக தகவல் பரவியது.

இந்த தகவல் அறிந்து அப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் இன்று காலை ஒரே இடத்தில் திடீரென்று ஒன்று திரண்டனர்.

அப்போது அவர்கள் சந்திரநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எருமப்பட்டி, பப்பிரெட்டியூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திரண்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சந்திரநல்லூரில் டாஸ்மாக் கடையை அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து சந்திரநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனபால் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த சந்திரநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எருமப்பட்டி, பப்பிரெட்டியூர் ஆகிய பகுதிகளில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மிகவும் கட்டுபாட்டுடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

மேலும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் வாலிபர்கள் குடிபோதையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளை தொந்தரவு செய்வார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இந்த பகுதியில் கோவில்களும் இருப்பதால் அங்கு செல்லும் பெண்களும் அவதிப்படுவார்கள். குடிக்காத வாலிபர்களை கூட மதுபான கடையை அமைத்து குடிக்க வைப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்

இதனால் எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம் என்று இங்கு வந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.

இதுகுறித்து நாங்கள் ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News