செய்திகள்

வலங்கைமான் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து கொத்தனார் கொலை: இளநீர் வியாபாரி கைது

Published On 2017-04-27 11:46 GMT   |   Update On 2017-04-27 11:46 GMT
வலங்கைமான் அருகே கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கோவிந்தக்குடி தெற்கு தெரு காலனி பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் பாலாஜி (வயது 24) கொத்தனார்.

நேற்று இரவு இவர் தெருவில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரியான கோபி (வயது 40) என்பவர் தட்டி கேட்டுள்ளார்.

இதில் பாலாஜிக்கும், கோபிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இந்த தகராறில் பாலாஜி வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது.

இதனை அவர் எடுக்க கீழே குனிந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த கோபி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து பாலாஜியின் தலையின் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.அவர் பேச்சுமூச்சின்றி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பாலாஜியின் சகோதரி மேத்தா (35) அங்கு ஓடிவந்து அதனை தடுத்தபோது அவரையும் கோபி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவரும் படுகாயமடைந்தார்.

இதனை கண்ட தெருவாசிகள் ஓடிவந்து தகராறை தடுத்து மயங்கி கிடந்த பாலாஜியையும், படுகாயமடைந்த மேத்தாவையும் மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பாலாஜியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த மேத்தாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாலாஜியை உருட்டுக்கட்டையால் கோபி அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை அடித்து கொலை செய்த இளநீர் வியாபாரி கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News