செய்திகள்
பஸ்கள் இயக்குவது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அருகில் போலீஸ் துணை கமி‌ஷனர் சியாமளா

தமிழகம் முழுவதும் தற்காலிக டிரைவர் - கண்டக்டர் மூலம் பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-01-05 05:19 GMT   |   Update On 2018-01-05 05:19 GMT
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பஸ் போக்குவரத்தை இயக்க தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #Transportstrike #Busstrike #MTCstrike #MRVijayaBaskar
சென்னை:

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை சில தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக தொடர்கிறது.

இன்று காலையில் ஒவ்வொரு டெப்போவிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின்படி அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு அளிப்பதாக கூறியதை 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கூறி சில தொழிற்சங்கங்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 22 முறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மொத்த போக்குவரத்து தொழிலாளர்கள் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் எங்களுடைய அண்ணா தொழிற்சங்கத்தில் மட்டும் 90 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். 70 சதவீத தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளதால் இவர்களை வைத்து இன்று பஸ்களை இயக்கி வருகிறோம்.



எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்புடன் அனைத்து பஸ்களும் இயக்கப்படும். போக்குவரத்து கழக வரலாற்றில் இவ்வளவு அதிக ஊதியம் இப்போதுதான் உயர்த்தி வழங்கப்படுகிறது. புதிய ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.1000 கோடி செலவாகும்.

ஆனால் இதை ஏற்காமல் 13 தொழிற்சங்கத்தினர் அரசியல் செய்து வருகின்றனர். 36 சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பஸ் போக்குவரத்தை இயக்க தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் மூலம் பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான பணிகள் அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென பஸ்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வது முறையா? சங்கத்தை வளர்ப்பதற்காக இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News