செய்திகள்

வடசேரியில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மா.கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் - 26 பேர் கைது

Published On 2018-01-08 10:06 GMT   |   Update On 2018-01-08 10:06 GMT
வடசேரியில், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக பஸ்போக்குவரத்து முடங்கி உள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் முழுமையாக ஆதரவு தெரிவித்து உள்ளனர். இன்று அவர்கள் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற கோரி நாகர் கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. என்றாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த இன்று காலையிலேயே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வடசேரி அண்ணா சிலை முன்பு குவிந்தனர்.

போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாதவன், நகர செயலாளர் பெஞ்சமின், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1700 கோடி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் நிர்வாகிகள் உள்பட 26 பேர் கைதானார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக போக்குவரத்து துறையினர் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாகர்கோவில் வடசேரியில் இன்று ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News