செய்திகள்

விஜய் படத்துக்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

Published On 2018-06-22 06:09 GMT   |   Update On 2018-06-22 06:09 GMT
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #vijay #sarkar #HBDThalapathy
நடிகர் விஜய்க்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

விஜய் புகை பிடிப்பது போன்ற படத்துடன் வெளியான போஸ்டரில் தலைப்பாக “சர்கார்” என்ற வார்த்தை இருந்தது.

போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்கார் பட போஸ்டருடன் “சிகரெட் இல்லாமலே நீங்கள் ஸ்டைலாக இருப்பீர்கள்” என்று பதிவிட்டார்.

தொடர்ந்து “விஜய் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைபிடிப்பதை ஊக்குவிப்பது வெட்கக்கேடானது” என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் முன்பு ஒரு முறை அன்புமணி வேண்டுகோளை ஏற்று விஜய் இனி சினிமாவில் புகை பிடிப்பது போல நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்த செய்தியையும் இணைத்து இருந்தார்.

திரைப்படங்களில் புகை பிடிப்பதை ஊக்குவிக்கும் காட்சிகள் இடம்பெறக்கூடாது என்பதை அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஜினி நடித்த பாபா திரைப்படத்திற்கு பா.ம.க. எதிர்ப்பைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து ரஜினி படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவில்லை.

நடிகர் விஜய் அழகிய தமிழ்மகன் படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்ததற்கு அப்போது மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி ராமதாசும், பசுமைத் தாயக அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இனி இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் உறுதி அளித்தார். இது பத்திரிகைகளிலும் வெளியானது.



அந்த சமயத்தில் விஜய் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “அன்புமணி ராமதாசின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான வி‌ஷயம் தான். அவருடைய வேண்டு கோளை ஏற்று, இனிமேல் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

என்னுடைய நடிப்பில் திரைக்குவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தேன். அதில், கெட்டவன் கதாபாத்திரமும் ஒன்று.

அந்தக் கதாபாத்திரம் கெட்டவன் என்பதைக் காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்தார். இறுதியில் அவன் திருந்துவதைக் காட்டுவதற்காகத்தான் சிகரெட்டைத் தூக்கி எறிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக் கூடத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அந்தப் பிரச்சினை அப்போதே முடிந்தாலும் விஜய் தனது படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை மட்டும் தொடர்ந்து வருகிறார். துப்பாக்கி படத்தின் போஸ்டரில் சுருட்டு பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இதற்கும் எதிர்ப்புகள் கிளம்ப இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்தக் காட்சியை நீக்கினார். விஜய் மீண்டும் “இனி என் படங்களில் புகைபிடிக்கும் காட்சி வராது” என்று கூறினார். ஆனால் அதன்பின் வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சியில் நடித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரிலும் அந்த நிலையே தொடர்கிறது. #vijay #sarkar #HBDThalapathy
Tags:    

Similar News