செய்திகள்

மயிலம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து - என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2018-06-26 16:11 GMT   |   Update On 2018-06-26 16:11 GMT
மயிலம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி, ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் மகன் விக்னேஸ்வரன் (வயது 19). மயிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் நேற்று காலை மயிலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்ற தனது பாட்டியை அழைத்து வருவதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவர் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் காளி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஒரு லாரியின் அச்சு திடீரென முறிந்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியவாறு எதிரே விக்னேஸ்வரன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் லாரியின் அடிப்பகுதியில் ஸ்கூட்டருடன் சிக்கிய விக்னேஸ்வரன் சுமார் 30 அடி தூரம் வரை இழுத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து சாலையோர மரத்தில் மோதி லாரி நின்றது. இந்த விபத்தில் விக்னேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அச்சு முறிந்ததை அறிந்த டிரைவர் ஓடும் லாரியில் இருந்து கீழே குதித்து லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி, மயிலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News