செய்திகள்
வருமான வரித்துறை சோதனை பற்றி கவர்னரை சந்தித்து புகார் கொடுப்பேன்- மு.க.ஸ்டாலின்
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக வருகிற திங்கட்கிழமை கவர்னரை சந்தித்து புகார் கொடுக்க இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வருமான வரி சோதனை நடக்கிறது. இதுபற்றி முழுமையான தகவல்கள் தரப்பட வேண்டும். இதற்காக நான் கவர்னரை வருகிற திங்கட்கிழமை (23-ந்தேதி) சந்தித்து பேச உள்ளேன். அப்போது அவரிடம் நான் வருமான வரி சோதனை தொடர்பான புகார்களை அளிப்பேன்.
ஏற்கனவே நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வருமான வரித்துறை சோதனை நடத்திய பட்டியல் விவரங்களை ஊழல் தடுப்பு பிரிவு அல்லது சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ஆதரவு தெரிவிப்பதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
தமிழ்நாட்டில் எதுவும் நடக்காதது போல சட்டம்- ஒழுங்கு பற்றி முதல்- அமைச்சர் பேசி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் தனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் நடக்கும் முறைகேடுகளை ஒப்புக்கொள்வது போல் அவரது பேச்சு அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.