செய்திகள்

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இடுப்பு எலும்பு முறிந்து ஒருமாதமாக அவதிப்படும் பெண்

Published On 2018-10-15 11:02 GMT   |   Update On 2018-10-15 11:02 GMT
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இடுப்பு எலும்பு முறிவு காரணமா சிகிச்சை பெரும் பெண் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளார்.
சென்னை:

சாமானியர்களுக்கு உயர் சிகிச்சை என்பது எட்டாக்கனி என்பது தெரிந்ததே.

சாதாரண மக்களும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் பெற வேண்டும் என்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகளிலும் பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் முறை அமுல்படுத்தப்பட்டது. இதற்காக தனி வார்டுகளே அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (60). வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை பெண். கடந்த மாதம் 16-ந்தேதி இரவு பாத்ரூம் சென்றபோது தடுமாறி விழுந்ததில் இடுப்பில் பலத்த அடிபட்டது.

மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றபோது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டி பார்க்கும் வார்டில் சேர்ந்தார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதியும் இருக்கிறது.

இடுப்பில் ‘பிளேட்’ பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்காக அரசு காப்பீட்டு திட்டத்தில் இருந்து ரூ.66 ஆயிரம் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிளேட் வரவில்லை என்று ஒரு மாதமாக சிகிச்சை நடக்கவில்லை. இப்போது தினமும் அறை வாடகையை கட்டிக் கொண்டு ஒரு மாதமாக மீனாட்சி தவித்து வருகிறார்.

தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றால் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சில நாட்களில் கட்டுப்படுத்தி ஆபரேசனையும் செய்து இருப்பார்கள். அங்கு சென்றால் அதிகமாக செலவாகும் என்பதால் தான் மீனாட்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருக்கிறார்.

ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் காலதாமதம் வெளியே ஆகும் செலவை விட கூடுதலாகி விடும் என்று மீனாட்சி குடும்பத்தினர் ஆதங்கப்படுகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News