செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கி ஏமாற்றிய மின்சார வாரிய ஊழியர் கைது

Published On 2018-10-28 16:22 GMT   |   Update On 2018-10-28 16:22 GMT
அரூர் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கி ஏமாற்றிய மின்சார வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

அரூர்:

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கே.வேட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நெடுங்கிள்ளி (வயது64). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஏங்கல்ஸ். இவர் பி.எஸ்.சி., பி.எட். படித்து உள்ளார்.

இவருக்கு மின்சாரவாரியத்தில் வேலை வாங்கி தருவதாக அனுமன்தீர்த்தம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றும் அரூர் சந்திரபுரம் வேடியப்பன்கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் ஆசை வார்த்தை கூறினார். இதற்காக ரூ.6 லட்சம் வேண்டும் என்றும் அவர் கேட்டார். முதல் கட்டமாக ரூ.4 லட்சத்தை குணசேகரனிடம் கொடுத்தார். மீதி 2 லட்சத்தை வேலைக்கான உத்தரவு வந்த உடன் தர வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது குறித்து நெடுங்கிள்ளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் அரூர் இன்ஸ்பெக்டர் பவுலேஸ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தி வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய மின்சார வாரிய கணக்கீட்டாளர் குணசேகரனை கைது செய்தார். அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News