செய்திகள்

எஸ்.பி. தாக்கியதை கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

Published On 2019-03-16 08:44 GMT   |   Update On 2019-03-16 08:44 GMT
இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் அரவிந்த்சாமியை எஸ்.பி. தாக்கியதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நேற்று புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . கல்லூரி முன்பு நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் வந்தனர். அப்போது போராட்டத்தை தூண்டியதாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் அரவிந்த்சாமி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதையடுத்து மாணவிகள் போலீஸ் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனிடையே போராட்டத்தின் போது இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் அரவிந்த்சாமியை எஸ்.பி., செல்வராஜ் தாக்கினார். இதற்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய மாணவர் சங்கம் , மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடவும் சென்றனர். அப்போது 10 பேர் மட்டும் எஸ்.பி.யிடம் பேச்சுவார்த்தை நடத்த செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட எஸ்.பி., செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி 200 க்கும் மேற்பட்ட போலீசார் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆதி தமிழர் முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் நல சங்கம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
Tags:    

Similar News