செய்திகள்
தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணி பிரமுகரை போலீஸ் அழைத்து சென்ற காட்சி

செங்குன்றத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணி பிரமுகர்

Published On 2019-09-10 09:20 GMT   |   Update On 2019-09-10 09:44 GMT
செங்குன்றத்தில் செல்போன் டவரில் ஏறி இந்து மக்கள் முன்னணி பிரமுகர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம்:

செங்குன்றம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (54). இந்து மக்கள் முன்னணி அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இன்று காலை 8 மணி அளவில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏறினார்.

120 அடி உயரமுள்ள அந்த டவரின் உச்சிக்கு சென்று தற்கொலைக்கு முயன்றார்.

அவரது செயல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமி‌ஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

மைக் மூலம் அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்தார். டவரில் யாரும் ஏறினால் கீழே குதித்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

9.30 மணி வரை அவர் கீழே இறங்கி வராததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் டவரில் ஏறினார். அவர் சன்முக சுந்தரத்துடன் பேசிக் கொண்டே உச்சிக்கு சென்று அவரை பத்திரமாக இறக்கினார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் வக்பு போர்டுக்கு சொந்தமாக நிலத்தில் பல்வேறு இனத்தவர்கள் குடியிருந்து வருவதாகவும், அதில் இந்துக்களுக்கு மட்டும் பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். பட்டா வழங்ககோரி பலமுறை முயற்சி செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் டவரில் இன்ஸ்பெக்டர் துணிச்சலாக ஏறி இந்து மக்கள் முன்னணி பிரமுகரை காப்பாற்றியதை பாராட்டினர்.
Tags:    

Similar News