செய்திகள்
காலிபிளவர் பயிர்சாகுபடி

கூடலூர் பகுதியில் காலிபிளவர் பயிர்சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2019-09-18 08:31 GMT   |   Update On 2019-09-18 08:31 GMT
கூடலூர் பகுதியில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று விவசாயிகள் காலிபிளவர் பயிர்சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூடலூர்:

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியான பெருமாள்கோவில் புலம், கழுதைமேடு, சரித்திரவு, காக்கான்ஓடை, காஞ்சிமரத்துறை, ஒழுகுவழிசாலை ஆகிய பகுதிகளில் உள்ள தோட்ட விவசாயிகள் கடந்த ஆடி மாதம் காலிபிளவர் பயிர் சாகுபடி செய்திருந்தனர். காலிபிளவர் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நாளில் இருந்து 90 முதல் 120 நாட்களில் மகசூல் தரும்.

தற்போது இந்தப் பகுதிகளில் காலிபிளவர் பயிர் சாகுபடி செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகி உள்ள நிலையில் காலிபிளவர் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. குறைந்த காலத்தில் அதிக மகசூல் கிடைக்கும் தருவாயில் உள்ளதால் விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒப்பந்த அடிப்படையில் சீசன் முடியும் வரை மொத்த பணத்தை கொடுத்துவிட்டு காலிபிளவர் அறுவடை செய்கின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட காலிபிளவர் பூக்கள் லாரிகள் மூலம் மதுரை, திருச்சி, திண்டுக்கல் காய்கறி மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. பைகளில் அடுக்கி அதன் எடைக்கு ஏற்ப பணத்தை வசூல் செய்கின்றனர். ஒருசில விவசாயிகளிடம் இருந்து உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேனி ஆகிய வாரச்சந்தை வியாபாரிகளும் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு புழுக்கள் தாக்கியதால் காலிபிளவர் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags:    

Similar News