செய்திகள்
ஸ்ரீதர் வாண்டையார்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி போராட்டம்- ஸ்ரீதர் வாண்டையார் அறிவிப்பு

Published On 2019-10-23 16:15 IST   |   Update On 2019-10-23 16:15:00 IST
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க கோரி போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்துள்ளார்.

மதுரை:

தேவரின் தேச பக்தி முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவருமான ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் உள்பட பல்வேறு தேவர் அமைப்பினர் மதுரையில் கூடி ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று தேவரின் தேச பக்தி முன்னணி அமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம், ரெயில் மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால் இதுநாள் வரை மத்திய, மாநில அரசுகள் விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை வைக்கவில்லை.

எனவே விரைவில் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டவில்லை என்றால் வருகிற 30-ந் தேதி தேவர் ஜெயந்தி அன்று மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதில் எங்கள் அமைப்பை சேர்ந்த ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். அனைத்து தலைவர்களும் அன்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து சென்ற பிறகு 10 மணிக்கு போராட்டம் தொடங்கும்.

பசும்பொன்னில் அன்றைய தினம் நடைபெறும் அன்னதானம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் அன்றைய தினம் பசும்பொன் செல்வது போன்று மதுரை போராட்டத்திலும் பெரும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் 30-ந் தேதிக்குள் பெயர் வைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். தென் மாவட்டங்களில் போராட்டம் நடக்கும்.

மதுரையில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது போல், அனைத்து மக்களும் எங்களின் தர்ணா போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே அரசு நடவடிக்கை எடுத்து எங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் சுந்தரசெல்வி ஒச்சாத் தேவர், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சிவரக்கோட்டை செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News