செய்திகள்
மருத்துவ பரிசோதனை

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-05-06 08:12 GMT   |   Update On 2020-05-06 08:12 GMT
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா குறித்த பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக சென்னை கோயம்பேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது அவர்களிடம் தொடர்பு வைத்திருந்த 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த டிரைவர் மற்றும் கிளினர், தொழிலாளர்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா குறித்த பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சென்று வந்தவர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று உறுதியாவதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வரும் வாகனங்களுக்கும், காய்கறி ஏற்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கும் அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

வாகன டிரைவர்கள் மற்றும் கிளினர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் பெயர், முகவரி, செல் நம்பர் ஆகியவற்றை பதிவு செய்த பின்னரே அனுப்பப்படுகின்றனர். கோயம்பேடு சந்தையால் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கோயம்பேட்டிற்கு அடுத்தபடியாக இருக்கும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பணிபுரிபவர்களுக்கும் பாதிப்பு அதிகரிக்கும் என தொழிலாளர்களும், பொது மக்களும் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News