செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வடமாநில தொழிலாளர்கள் முறையிட்ட காட்சி.

சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு கலெக்டரிடம் முறையிட்ட வடமாநில தொழிலாளர்கள்

Published On 2020-05-13 14:06 GMT   |   Update On 2020-05-13 14:06 GMT
ஊட்டியில் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வடமாநில தொழிலாளர்கள் முறையிட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கேத்தி பிரகாசபுரத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்து காரில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியே புறப்பட்டார். உடனே காரின் அருகில் சென்ற தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு முறையிட்டனர். அதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், நீங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். அங்கு சென்றாலும் திரும்பி வர முடியாது. இங்கேயே இருந்து பணிபுரியுங்கள் என்றார். உடனே நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராக இருக்கிறோம், எங்களை அனுப்பி வையுங்கள் என்று தொழிலாளர்கள் கூறினர். இதையடுத்து அவர்களது விவரங்களை சேகரிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ஊட்டி தாசில்தார் அலுவலகம் மூலம் 1,400 பேர் சொந்த ஊர் செல்ல பதிவு செய்து உள்ளனர். இதனை தெரிந்துகொண்டு வடமாநில தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு வருகின்றனர். சரியான காரணம் இருந்தால் மட்டுமே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் ரம்ஜான் பண்டிகைக்கு செல்ல வேண்டும் என்கின்றனர். அவர்கள் திரும்பி வரமாட்டோம் என உறுதிமொழி அளித்து விட்டு செல்லலாம் என்றார். தொழிலாளர்கள் இந்தி மொழியில் பேசியபோது, கலெக்டரும் இந்தியில் பேசினார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News