செய்திகள்
9 ஊழியர்களுக்கு கொரோனா - முசிறி சப்-கலெக்டர், தொட்டியம் தாலுகா அலுவலகங்கள் மூடல்
2 தாசில்தார்கள் உள்பட 9 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, முசிறி சப்-கலெக்டர் அலுவலகம், தொட்டியம் தாலுகா அலுவலகம் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தொட்டியம்:
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் தாசில்தார் முதல் கிராம உதவியாளர் வரை உள்ள அனைத்து வருவாய்துறை ஊழியர்களுக்கும் கடந்த 22-ந்தேதி கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது.
இதில் தொட்டியம் தாசில்தார் மலர் மற்றும் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் சந்திரக்குமார், அலுவலக பெண் உதவியாளர், டிரைவர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே 5 பேரையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தாலுகா அலுவலகம் முழுவதும் சுகாதார பணியாளர்களால் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதுபோல் முசிறி சப்- கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 4 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் யாரும் வராத வகையில் அலுவலகம் தற்காலிகமாக பூட்டி வைக்கப்பட்டது.
இதற்கிடையே திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் தலைமை தபால் நிலையம் நேற்று மூடப்பட்டது. அத்துடன் 24-ந்தேதி (நேற்று), 25-ந்தேதி(இன்று) ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் இரு நாட்களும் தலைமை தபால் நிலையம் செயல்படாது என்ற அறிவிப்பு பலகை நுழைவுவாயிலில் வைக்கப்பட்டு உள்ளது.
திடீரென தபால் நிலையம் மூடப்பட்டதால் தபால் தலை, தபால் கவர் வாங்க வந்த பொதுமக்கள், மற்றும் பல்வேறு சேமிப்பு பத்திரங்கள் அது தொடர்பான சேவைகளை பெற வந்தவர்கள், பார்சல் அனுப்புவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.