செய்திகள்
கூடலூர்மாக்கமூலாவில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி

நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - தாசில்தார் பேச்சுவார்த்தை

Published On 2020-09-25 10:56 GMT   |   Update On 2020-09-25 10:56 GMT
கூடலூர் மாக்கமூலாவில் உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் தாசில்தார் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூடலூர்:

கூடலூர் நகராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்களால் தினமும் சேகரிக்கக்கூடிய குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர கிடங்கு இல்லை. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு செளுக்காடியில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தை நகராட்சி நிர்வாகம் பல லட்சம் செலவில் விலைக்கு வாங்கியது. பின்னர் அந்த நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனால் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி கழிவுகள், பழைய துணிகள் பல வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாததால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் கூடலூர் மாக்கமூலா பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 20 சென்ட் அரசு நிலம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் காய்கறி கழிவுகளில் இருந்து நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நிலத்தை சமப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உரக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தாசில்தார் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல் உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, பெள்ளி உள்பட போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காய்கறி கழிவில் இருந்து உரம் தயாரிப்பதால் அப்பகுதியில் எந்தவித சுகாதார சீர்கேடும் ஏற்படாது என உறுதி அளித்தனர்.

இது சம்பந்தமாக அடுத்த வாரம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வருவாய்த்துறையினர் விளக்கம் அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை சமப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி கூறியதாவது:-

நகராட்சி பகுதியில் தினமும் சேரும் குப்பை கழிவுகளை தரம் பிரிக்க உரக்கிடங்கு போதியளவில் இல்லை. இதனால் மாக்கமூலாவில் காய்கறி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News