செய்திகள்
யானைகள்

கோவை மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம்- 48 நாட்கள் நடத்த அரசு உத்தரவு

Published On 2021-01-29 01:43 GMT   |   Update On 2021-01-29 01:43 GMT
கோவை மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நல்வாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இந்த ஆண்டு யானைகளுக்கான புத்துணர்வு முகாமை 48 நாட்கள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து கடந்த 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றி யானைகளை முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வர வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க செயல் அதிகாரிகளுக்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் சு.பிரபாகர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புத்துணர்வு முகாமிற்கு யானைகளை அழைத்து வருவதற்கு முன்பாக கொரோனா நோய் தொற்றால் யானைகள் பாதிக்கப்படவில்லை என மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

யானைகளுடன் செல்ல உள்ள பணியாளர்களுக்கும் 24 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நோய்தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

யானைகள் அருகில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது. முகாமில் பங்கேற்கும் யானைப்பாகன்கள், மருத்துவர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும முககவசம் அணிதல், சீரான இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி உபயோகப்படுத்துதல் போன்ற கொரோனா தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முகாமிற்கு அழைத்து செல்ல யானைகளை வாகனங்களில் ஏற்றுவதற்கு முன்பாக வாகனத்தை கிருமி நாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.

நோயுற்ற, வருடாந்திர பருவக்கோளாறு பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு, நோய் வர வாய்ப்பு உள்ள மற்றும் முகாமிற்கு வர மறுக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்து வர வேண்டியது இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News