செய்திகள்
சுங்கச்சாவடி

பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்- சுங்கச்சாவடியில் ஓட்டுநர்கள் வாக்குவாதம்

Published On 2021-02-16 10:55 GMT   |   Update On 2021-02-16 10:55 GMT
வாகன ஓட்டுநர்களுக்கு ‘பாஸ்டேக்’ இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது தெரியாததால் சுங்க சாவடி ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமங்கலம்:

தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயம் என்றும், 15-ந்தேதி நள்ளிரவுக்கு மேல் இந்த ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு இன்று அதிகாலை முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் செயல் படுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, ராஜபாளையம், தென்காசி, குற்றாலம், உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த சுங்கச்சாவடியில் ‘பாஸ்டேக்’ இல்லாத வாகனங்களில் இரட்டிப்பான சுங்கவரி வசூல் செய்வதால் தங்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களை முற்றிலுமாக இயக்க முடியவில்லை எனவும் அந்த வழியாக வாகன ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர்.

ஒரு சில வாகன ஓட்டுநர்களுக்கு ‘பாஸ்டேக்’ இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது தெரியாததால் சுங்க சாவடி ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுங்கச் சாவடியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News