செய்திகள்
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன்

வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு- அனைத்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

Published On 2021-04-20 08:09 GMT   |   Update On 2021-04-20 08:09 GMT
கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது குறித்து அனைத்து மத பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
சென்னை:

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோது, கிராமப்புறங்களில் சிறிய கோவில்களை திறக்க அனுமதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் நகராட்சிப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் பெரிய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது.

அதன்படி, தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது, முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கோவில்களில் அர்ச்சனை செய்யக்கூடாது. சாமி தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நுழைவுவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், பக்தர்கள் கை, கால்களை சுத்தம் செய்த பிறகு உள்ளே நுழைவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும், பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும், பக்தர்கள் வரிசையில் நிற்கும் வகையில் வட்டமிட வேண்டும், உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி வாயில்களை பயன்படுத்த வேண்டும்.

சாமி சிலைகளை தொட பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவிலில் நடைபெறும் உற்சவங்களின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, பஜனை குழு, பக்தி இசைக்குழுக்களை அனுமதிக்க கூடாது.

விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்க கூடாது, வழிபாட்டு தலங்களின் தரைப்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனை ஏற்று ஒவ்வொரு வழிபாட்டு தலங்களிலும் தரிசனம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் கடந்த 10-ந்தேதி முதல் மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. புதிதாக கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வழக்கம் போல் கோவில்களில் சாமி தரிசனம் நடைபெற்று வருகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் அன்றைய தொழுகைக்கு செல்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசிக்க இன்று அனைத்து மத பிரதிநிதிகள் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணன் மி‌ஷன் செயலாளர் சாமி சுகதேவா னந்தா, ராமகிருஷ்ணா மி‌ஷன் ஆசிரம செயலாளர் சுவாமி பத்மசதானந்தா, சத்ய ஜனாநந்தா, தர்மபுர ஆதீன மடாலயா தேவாலய சம பிரசார நிலைய தலைமை பூசாரி மீனாட்சிசுந்தரம், பிரம்ம குமாரிகள் அமைப்பு தலைமை சகோதரி ஜான்சி.

மயிலை மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி, தமிழ்நாடு பி‌ஷப் கவுன்சில் துணை செயலாளர் சகாயராஜ், கீழ்ப்பாக்கம் பி‌ஷப் மார்ட்டின், பி‌ஷப் கதிரொலி மாணிக்கம், பி‌ஷப் டாக்டர் மேசக்ராஜா, பி‌ஷப் ஆசீர்வாதம்.

தமிழ்நாடு சுன்னத் முஸ்லிம் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயுப், தமிழ்நாடு ஷியா முஸ்லிம் தலைமை காஜி குலாம் முகமது, அமீர்மகால் ஆற்காடு நவாப் முகமது அப்துல்அலி, ஜமாத் உலமா சபை செயலாளர் அன்வர் பாதுஷா உலவி, தமிழ்நாடு மஸ்ஜித் ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜி பஷீர்அகமது உள்பட அனைத்து மத பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வருவதால் அன்றைய தினம் ரம்ஜான் தொழுகைக்கு அனுமதிப்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Similar News