செய்திகள்
நாட்டு மாடுகள்

நாட்டு மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2021-06-01 07:05 GMT   |   Update On 2021-06-01 07:05 GMT
உடுமலை பகுதியில் இயற்கை விவசாயத்துக்கு கைகொடுக்கும் வகையில் நாட்டு மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை:

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ள விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர். கிராமப் பொருளாதாரத்தின் ஆணி வேராக இருக்கும் கால்நடை வளர்ப்பு இன்று பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் அதிக பால் தரும் வெளிநாட்டு கலப்பின மாடுகளே அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இந்தநிலையில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் மட்டுமே நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தநிலையில் உடுமலையையடுத்த திருமூர்த்திமலையில் உள்ள விவசாயி செந்தில் ஆறுமுகம் , பட்டி அமைத்து நாட்டு மாடு ரகமான மலை மாடுகளை வளர்த்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ராஜஸ்தானில் தர்பார்கர், குஜராத்தில் கிர், பஞ்சாபில் சாகிவால், ஆந்திராவில் ஓங்கோல் என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்டு மாட்டு ரகங்கள் உள்ளன.அந்தவகையில் தமிழகத்தில் காங்கேயம், உம்பளச்சேரி, புலிக்குளம், ஆலம்பாடி, மணப்பாறை, புங்கனூர், திருச்செங்கோடு, பர்கூர், தேனி மலை மாடுகள் என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற ஏராளமான ரக நாட்டு மாடுகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான ரகங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம்.அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு, கொண்டு வரப்பட்ட பசுமைப்புரட்சி, பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட வெண்மைப்புரட்சி இவை இரண்டுக்குமே நாட்டு மாடுகளின் அழிவில் பெரும்பங்குண்டு.

பசுமைப்புரட்சியால் விவசாயப்பணிகளில் எந்திரங்களின் பயன்பாடு அதிகமானது.இதனால் உழவு மாடுகளுக்கான தேவை குறைந்தது. எனவே பெரும்பாலான காளை மாடுகள் அடி மாடுகளாக இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன.மேலும் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், சிறுநீர் போன்றவற்றுக்கான தேவை குறைந்ததும் மாடு வளர்ப்பில் விவசாயிகளுக்கான ஆர்வம் குறைந்ததற்கு காரணமாகும்.

நாட்டுப் பசுக்கள் மூலம் ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 லிட்டர் பால் மட்டுமே கிடைக்கும்.இதனால் ஒரு நாளைக்கு 10 லிட்டருக்கு மேல் பால் கறக்கும் வெளிநாட்டுப் பசுக்களை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஆனால் வெளிநாட்டுப் பசுக்களிலிருந்து கிடைக்கும் ஏ 1 ரகப் பாலை விட நாட்டு பசுக்களிலிருந்து பெறப்படும் ஏ 2 ரகப் பாலில் தான் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத ஏராளமான நல்ல சத்துக்கள் உள்ளன. ரசாயன உரங்கள் உடனடி பலனை தரக்கூடியவை. அதேநேரத்தில் இயற்கை எரு மக்கி மண்ணுடன் கலப்பதற்கு கூடுதல் அவகாசம் பிடிக்கும். ஆனால் நாட்டு மாடுகளிலிருந்து பெறப்படும் சாணம் போன்றவைதான் மண்ணை உயிர்ப்புடன் வைப்பதில் முதலிடம் பிடிக்கின்றன.

நாங்கள் முழுமையாக இயற்கை விவசாயம் செய்து வருவதால் பட்டி அமைத்து மலைமாடுகளை வளர்த்து வருகிறோம்.இவற்றுக்கென பெரியளவிலான பராமரிப்பு தேவையில்லை.அத்துடன் தீவனத்துக்கென அதிக அளவில் செலவும் செய்ய வேண்டியதில்லை.காலையில் பால் கறந்து விட்டு மேய்ச்சலுக்குத் திறந்து விட்டால் மலையடிவாரத்தில் மேய்ந்து விட்டு மாலையில் வீடு திரும்பி விடும்.பெரும்பாலும் நோய் தாக்குதலுக்கு ஆளாவதில்லை.

நமது பருவநிலைக்கு ஏற்ற ரகங்களாக நாட்டு மாடுகளே உள்ளது.தற்போது மக்களிடையே நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இதனால் நாட்டு மாட்டுப்பாலுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது.அத்துடன் கன்றுகளை விற்பனை செய்வதன் மூலமும் கூடுதல் வருவாய் ஈட்ட முடிகிறது.இயற்கை விவசாயத்தில் உரமாக மட்டுமல்லாமல் பஞ்ச கவ்யா, அமிர்தக்கரைசல், இயற்கை பூச்சி விரட்டி என பலவகைகளில் நாட்டு மாடுகள் கைகொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News