செய்திகள்
கைது

திண்டுக்கல் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் திருட்டு- 3 பேர் கைது

Published On 2021-06-01 08:58 GMT   |   Update On 2021-06-01 08:58 GMT
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே டாஸ்மாக் குடோன் உள்ளது. அங்கிருந்து திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குடோனில் நிறுத்தப்பட்ட லாரியில் மதுபாட்டில்கள் திருட்டு போனதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முனியாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது லாரியில் தார்பாயை அகற்றிவிட்டு 96 மதுபான பாட்டில்கள் திருடியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.11,520 ஆகும். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன்,சப்இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் தலைமையிலான போலீசார் எம்.எம். கோவிலூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். பின்னர் அவர்கள் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தர்மத்துப்பட்டி அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்த சகோதரர்களான லட்சுமணன் (வயது 26), (விஜய் 23) மற்றும் உறவினர் விஜயகுமார் (25) என்பதும் தப்பியோடிய ராமன் (26) என்பவரும் லட்சுமணனும் இரட்டை சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அளித்த தகவலின்பேரில் சகோதரர் விஜய் மற்றும் உறவினர் விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து மதுபான பாட்டில்கள் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமணன், விஜய்,விஜயகுமார் ஆகிய 3 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 96 மதுபான பாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ராமன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News