செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் கடந்த மே மாதத்தில் 13 வயது சிறுவன் உள்பட 551 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-06-01 10:20 GMT   |   Update On 2021-06-01 10:20 GMT
மாவட்டத்தில் முதல் முறையாக 13 வயது சிறுவன் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இச்சம்பவம் கோவையில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தை அடைந்தது. தற்போது, பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தினசரி கொரோனா தொற்று காரணமாக 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழக்கின்றனர்.

தற்போது வரை மாவட்டத்தில் மொத்தம் 1,274 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 551 பேர் கடந்த மே மாதத்தில் மட்டும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஆவர். 20 சதவீதம் பேர் வரை 20 வயது முதல் 49 வயதிற்குள் உள்ளவர்கள்.

இதனால் இதுநாள் வரை குழந்தைகள் இறப்பு என்பது கோவையில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது முதல் முறையாக 13 வயது சிறுவன் ஒருவர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்வலி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சிறுவனை அவரது பெற்றோர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 29-ந் தேதி சேர்த்தனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மாவட்டத்தில் முதல் முறையாக 13 வயது சிறுவன் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இச்சம்பவம் கோவையில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- சிறுவனுக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.

தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடுமையான வலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News