செய்திகள்
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2021-06-20 10:41 GMT   |   Update On 2021-06-20 10:41 GMT
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 47,000 ஏக்கர் விளைநிலம் அமராவதி அணை தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது அமராவதி அணை. மொத்தம்  90அடி கொள்ளளவு கொண்ட இந்த  அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது 80.12அடியாக உள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 47,000 ஏக்கர் விளைநிலம் அமராவதி அணை தண்ணீர் மூலம் பாசனவசதி பெறுகிறது.

இந்தநிலையில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து  விடப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று காலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பழைய ஆயக்கட்டு வாய்க்காலுக்கு வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் 1072மி.கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 21,867 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்கள் பயன்பெறும்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் மதகு வழியாக இன்று முதல் ஜூலை 4-ந்தேதி வரை 15 நாட்களுக்கு 571 மி.கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 25,250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News