செய்திகள்
கோப்புபடம்

பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை

Published On 2021-06-30 08:40 GMT   |   Update On 2021-06-30 08:40 GMT
ஒரு குழுவினர் 7 இடங்களில் தலா 30 பேரிடம் குலுக்கல் முறையில் ரத்த மாதிரிகள் சேகரிப்பார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று மாவட்டத்தில் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 82 ஆயிரத்து 103 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 396 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,722 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 750-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து அறியும் வகையில் குறிப்பிட்ட நபர்களுக்கு ரத்தப்பரிசோதனை நடத்துவது வழக்கம். 

அதுபோல் இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறித்து அறிவதற்காக நான்கு குழுக்கள் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவில் கிராமப்புற செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு குழுவினர் 7 இடங்களில் தலா 30 பேரிடம் குலுக்கல் முறையில் ரத்த மாதிரிகள் சேகரிப்பார்கள். சிறுவர்கள், பெரியவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்படும். நேற்று முதல் ஒரு வார காலத்துக்கு இவர்கள் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.

மொத்தம் நான்கு குழுக்கள் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 28 இடங்களில் தலா 30 பேர் என 840 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க  உள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 9 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது.

ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியில் 30 பேரிடம் மருத்துவ குழுவினர் ரத்த மாதிரி சேகரித்தனர். இவ்வாறு மொத்தம் 28 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ரத்தம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News