செய்திகள்
திருப்பூரில் உள்ள கடையில் இன்று போலீசார் சோதனை செய்த காட்சி.

திருப்பூரில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு 'சீல்’

Published On 2021-07-25 08:47 GMT   |   Update On 2021-07-25 08:47 GMT
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
திருப்பூர்:

தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், மாநகர போலீ சாருடன் இணைந்து திருப்பூர் மாநகரப்பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மாநகர் பகுதிகளான ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோடு, மங்கலம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 20 கடை களில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 150 கிலோ குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குட்கா இல்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்றுவோம் என்றனர். இந்தநிலையில் இன்றும் திருப்பூர் மாநகரின் பல்வேறு கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
Tags:    

Similar News