செய்திகள்
குழந்தைகள்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி- நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2021-08-08 15:43 IST   |   Update On 2021-08-08 15:43:00 IST
பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் 5 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் இருந்தால் விவரங்களை தெரிவிக்கலாம்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதற்கான மாவட்ட அளவிலான கூட்டம், ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் 6 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் கணக்கெடுக்கப்பட உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த மாணவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோல் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேற்கண்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஊட்டி, குன்னூர் உள்பட 6 தாலுக்காக்களில் 1,578 குடியிருப்பு பகுதிகளில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. குறிப்பாக தேயிலை தோட்டங்கள், தொழிற்சாலைகள், பழங்குடியின குடியிருப்புகள், கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் இருக்கிறார்களா? என கணக்கெடுக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் 5 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் இருந்தால் விவரங்களை தெரிவிக்கலாம். ஊட்டியில் 9788858996, குன்னூரில் 8903960379, கோத்தகிரியில் 9788858998, கூடலூரில் 9788858999 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட உள்ளனர்.

Similar News