செய்திகள்
மதுராந்தகம் ஏரி

மதுராந்தகம் ஏரி கொள்ளளவை 790 மில்லியன் கன அடியாக உயர்த்த திட்டம்

Published On 2021-09-02 09:06 GMT   |   Update On 2021-09-02 09:06 GMT
மதுராந்தகம் ஏரியில் ரூ.120 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் பணிக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
சென்னை:

மதுராந்தகம் ஏரி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி. இதன் கொள்ளளவு 530 மில்லியன் கன அடியாகும்.

இந்த ஏரி 1,058 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இதன் பரப்பளவை ஒப்பிடும்போது நீர் கொள்ளளவு குறைவாகவே இருக்கிறது.

இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் கொள்ளளவை 790 மில்லியன் கன அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.120 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த பணிக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தூர்வாருவதோடு கரைகளையும் 2 அடி உயரம் உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஏரிக்கு பாலாற்றின் கிளை ஆறுகளான கிளியார், நெல்வோய் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. நீர்வரத்து பகுதிகளும் தூர்ந்து கிடக்கிறது.

ஏரி தூர்ந்து கிடப்பதால் மழைக்காலங்களில் அதிகளவு வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கிறது.

ஏரியை அகலப்படுத்தும்போது எடுக்கும் மண்ணை ஏரி தண்ணீர் வெளியேறும்போது மூழ்கும் விவசாய நிலங்களில் கொட்டி உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த ஏரி 1798-ல் அப்போதைய பிரிட்டிஷ் கலெக்டர் லியோனல் பிளேஸ் என்பவரால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏரியை நம்பி 1154 ஹெக்டேரில் பாசனம் நடைபெறுகிறது. பக்கத்து கிராமங்களின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

எதிர்காலத்தில் நகரப்பகுதியின் குடிநீர் தேவைக்கும் இந்த ஏரி தண்ணீர் பயன்படும் வகையில் சீரமைப்பு பணிகள் நீண்ட கால திட்டத்துடன் நிறைவேற்றப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News