செய்திகள்
உடுமலை அமராவதிநகரில் உள்ள ராணுவ பள்ளியை படத்தில் காணலாம்.

13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - உடுமலை ராணுவ பள்ளி மூடல்

Published On 2021-11-01 07:10 GMT   |   Update On 2021-11-01 07:10 GMT
பள்ளி அமைந்துள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ பள்ளி (சைனிக்) உள்ளது. இங்கு 6-ம்வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.  

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். சுமார் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக 10 மற்றும் 12-ம்வகுப்பு மாணவர்கள் 200 பேருக்கு மட்டும் கடந்த 40 நாட்களாக பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதில் 96 மாணவர்கள்  விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில் பிளஸ்-2 மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 13 மாணவர்களும் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமிநாசினி  தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  

பள்ளி அமைந்துள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் நிலையில் ராணுவ பள்ளியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் - பெற்றோர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று 1 முதல் 8-ம்வகுப்பு வரை  மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
Tags:    

Similar News