செய்திகள்
குப்பனூர் சாலையில் மழை நீர் சாலையை பெயர்த்தெடுத்து குறுக்காக ஓடுவதை காணலாம்

பலத்த மழையினால் ஏற்காடு மலை பாதையில் மண்சரிவு- போக்குவரத்து தடை

Published On 2021-11-05 08:38 GMT   |   Update On 2021-11-05 08:38 GMT
ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலை உச்சிகளில் இருந்து சிறிய சிறிய பாறைகள் பெயர்ந்து கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே விழுந்துள்ளன.
ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை 7 மணி வரை விடிய விடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலை உச்சிகளில் இருந்து சிறிய சிறிய பாறைகள் பெயர்ந்து கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே விழுந்துள்ளன.

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குப்பனூர் செல்லும் சாலையிலும் மண் சரிந்துள்ளது. மழை நீர் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள விளைநிலங்களிலும் புகுந்தது. இதனால் பயிர்கள் மூழ்கி உள்ளது.

மேலும் மலைகளில் ஆங்காங்கே திடீர் நீருற்று ஏற்பட்டு, தண்ணீர் சாலைகளில் சேறும், சகதியுமாக பாய்ந்தோடுகின்றன. இதையடுத்து ஏற்காடு செல்லும் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏற்காடுட்டுக்கு செல்ல முடியாமலும், ஏற்காடு பகுதியில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதை அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையை சீரமைக்கும் பணி சிறிது கால தாமதமாகவே நடைபெற்று வருகிறது.

போலீசார், வருவாய்த் துறையினர், வனத்துறையினர் முகாமிட்டு மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் ஊழியர்களும், மின் பாதையில் விழுந்த மரம், செடி, கொடிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

ஏற்காடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News