உள்ளூர் செய்திகள்
தி.மு.க.வினர் சட்டசபை முற்றுகை-4 எம்.எல்.ஏ.க்கள் கைது
தி.மு.க.வினர் சட்டசபை முற்றுகையிட்டனர். இதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, முக்கிய மருந்துகளின் விலை உயர்வு, மாநில அரசின் மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்து இருந்தது.
புதுவை அண்ணாசாலையில் இருந்து தி.மு.க.வின் மாட்டுவண்டி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாட்டு வண்டியை எதிர்கட்சித்தலைவர் சிவா ஓட்டி வந்தார்.
அவரோடு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க.வினர் 5-க்கும் மேற்பட்ட வண்டிகளில் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி ஆலயம் வழியாக சட்டமன்றம் நோக்கி வந்தது.
ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். ஊர்வலத்தை ஆம்பூர் சாலை சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏறிப்போச்சு.. ஏறிப்போச்சு... விலைவாசி எறிபோச்சு... ரங்கசாமி அண்ணாச்சி... கியாஸ் விலை என்னாச்சு... அடிக்காதே... அடிக்காதே... ஏழை வயிற்றில் அடிக்காதே... கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... விலை உயர்வை கண்டிக்கிறோம். உடைக்காதே... உடைக்காதே... ஏழைகளின் எலும்பை உடைக்காதே... அதானி, அம்பானிக்கு தள்ளுபடி... ஏழைகளின் வயிற்றில் அடி... தனியார் மயமாக்காதே... தனியார் மயமாக்காதே... மின்துறையை தனியார் மயமாக்காதே என கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து தி.மு.க.வினர் போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். எதிர்கட்சி தலைவர் சிவா உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் முகமதுயூனுஸ், காந்தி, கோபால், கார்த்திகேயன், சக்திவேல், தைரியநாதன், செந்தில்குமார், குணாதிலீபன், வேலவன், அகிலன், அருள்செல்வி, நளினிசாரங்கன், தங்கவேலு, சண்குமாரவேல், கலியகார்த்திகேயன், சீத்தாராமன், மதன்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.