உள்ளூர் செய்திகள்
மதுரையில் நடந்த பேரணியில் அவதூறு கோஷம்: இந்து கடவுள்களை அவமதித்ததாக தி.க.வினர் மீது வழக்குப்பதிவு
இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தன.
மதுரை:
இடதுசாரிகள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காளவாசல் பகுதியில் கடந்த 29-ந்தேதி செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் இந்து மத கடவுள்கள் பற்றி அவதூறு கோஷங்கள் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தன.
செஞ்சட்டை பேரணியில் பங்கேற்ற வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர், அதன் மாவட்ட தலைவர் தலைமையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சட்டை பேரணியில் பங்கேற்ற தி.க.வினர் மீது மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்கள் மீது153(ஏ)-மதம், இனம், மொழி, ஜாதி, சமயம் சம்பந்தமாக விரோத உணர்வுகளை தூண்டுதல், 295(ஏ)-மத நம்பிக்கையை அவதூறு பிரசாரங்கள் வாயிலாக இழிவுபடுத்துதல், 505 (ஏ)-ஒருவர் சார்ந்த மதத்துக்கு எதிராக பகை-வெறுப்பு எண்ணங்களை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதே போன்று தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.