காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அருகே கர்ப்பிணி பெண் 35-வது நாளாக போராட்டம்
- தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார்.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டருகே வசிக்கும் பி.எஸ்சி மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கு பவித்ரா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மே மாதம் அவரை காஞ்சிபுரம் அழைத்து சென்று மோகன்ராஜ் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரி சவுமியாவுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 2 மாதம் முன்பு சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு வந்தார். அதன்பின்னர் மனைவி பவித்ராவை அவர் தொடர்பு கொள்ளவில்லை.
இதையடுத்து கணவரை தேடி 3 மாத கர்ப்பணியான பவித்ரா வேலாக்கவுண்டனூரில் உள்ள மோகன்ராஜின் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் சேர்ந்து பவித்ராவை அவரது கணவரை பார்க்க அனுமதிக்காமல் விரட்டி அனுப்பினார்கள்.
இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் ஒரு மாதமாக விசாரித்தும் மோகன்ராஜை கண்டுபிடிக்கவில்லை. மேலும் பவித்ராவை கணவர் வீட்டிற்குள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் மோகன்ராஜின் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய மோகன்ராஜ் குடும்பத்தினர் அவர்களது உறவினர்களை அனுப்பி பவித்ராவை அச்சுறுத்தி கடுமையாக தாக்கினர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் மீண்டும் மோகன்ராஜ் வீட்டு முன்பாக அமர்ந்து தொடர்ந்து 35-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.
கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.