சென்னை-புறநகர் பகுதிகளில் அதிரடி வேட்டை: மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகள் ரகசிய கண்காணிப்பு
- ரவுடிகளால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
- குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அடுத்தடுத்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும், உளவு பிரிவு போலீசாரும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ரவுடிகளை ரகசியமாகவும், தீவிரமாகவும் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டி பண வசூலில் ஈடுபடுவது என்பது ரவுடிகளின் திரைமறைவு தொழிலாகவே இருந்து வருகிறது. இது போன்ற மாமூல் வசூல் வேட்டையில் ஏ பிளஸ் மற்றும் ஏ வகையை சேர்ந்த ரவுடிகளே ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள்தான் கூலிப்படை கும்பல் தலைவனாகவும் செயல்படுகிறார்கள். இவர்கள் நில விவகாரங்களில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதும் உண்டு.
தொழிற்சாலைகளை நடத்தி வரும் தொழில் அதிபர்களை போனில் அழைத்து பேசி மிரட்டி பணம் பறிப்பது ஏ மற்றும் ஏ பிளஸ் வகை ரவுடிகளின் தினசரி செயல்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ரவுடிகள் கொன்று விடுவார்களோ? என பயந்து போய் புகார் அளிக்க முன் வருவதில்லை.
ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுக்காவிட்டால் உயிரோடு இருக்க முடியாது என்று ரவுடிகள் மிரட்டுவதால் உயிருக்கு பயந்து பலர் புகார் அளிப்பது இல்லை என்கிறார்கள் போலீசார்.
இதன் காரணமாகவே சத்தமின்றி ரவுடிகள் தங்களது மாமூல் வேட்டையை தொடரும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று கூறும் போலீசார் எனவே ரவுடிகளால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
சோழவரம் அருகே என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகளான முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் அப்பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுதல், மாமூல் தர மறுப்பவர்களை தீர்த்துக் கட்டுவது போன்ற குற்ற செயல்களில் துணிச்சலாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில்தான் இருவரும் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருக்கிறார்கள். இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அடுத் தடுத்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக ரவுடிகளின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் ஏ மற்றும் ஏ பிளஸ் வகையை சேர்ந்த ரவுடிகள் 100-க்கும் மேற்பட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் சில ரவுடிகளை தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்று தெரிவித்துள்ள போலீசார் அவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஏ பிளஸ், ஏ, பி, சி, பிரிவு ரவுடிகள் என மொத்தமாக 1,500-க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
இது தொடர்பாக ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரவுடிகளை கண்காணிப்பது என்பது மிகப்பெரிய வேலை. அதனை சென்னை போலீசார் கச்சிதமாகவே செய்து வருகிறார்கள். குறிப்பாக ரவுடிகளின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கிறோம். ரகசியமாக தகவல் தெரிவிப்பதற்காக ஆட்களும் இருக்கிறார்கள்.
இதன் மூலமாக ரவுடிகள் என்ன செய்தாலும் எங்களுக்கு தெரிந்துவிடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் கொட்டம் படிப்படியாக ஒடுக்கப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரவுடிகளை ஒழிப்பதற்கான அதிரடி வேட்டை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.